பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Sunday, July 29, 2012

நாம் எங்கே போகிறோம்?

மனிதன் ஜனனத்தில் தொடங்கி மரணம் வரைக்கும் அவனது முயற்சிகள்அனைத்தும் என்ன முடிவை தரப்போகிறது?, எந்த ஒரு செயலுக்கும் முடிவில் விடை கிடைப்பது போல, அதாவது படித்தால் பரிட்சையின் முடிவில் வெற்றி அல்லது தோல்வி  என்ற விடை கிடைப்பது போல மனித வாழ்க்கையின் முடிவில் (மரணத்திற்க்கு பிறகு) நமக்கு கிடைப்பது

வெற்றியா ?அல்லது  தோல்வியா? சிந்தியுங்கள்!
     
 இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பிறந்தது முதல் வளர்ந்து விளையாடி கல்வி கற்று கல்வியின் முடிவில் வேலையை பிடித்து சம்பாதித்து பணம் சேர்த்து, அந்த பணத்தினால் வீடு வாங்கி, கார் வாங்கி, மனைவியை தேடி, குழந்தையை பெற்று அவர்களையும் நம்மைப்போலவே ஆளாக்கி விளையாடி, படிக்கவைத்து வேலைத்தேடி, வேலையைப்பிடித்து  அவனது திறமைக்கேற்ப பணம் சம்பாதித்து அந்த பணத்தினால் மிகப்பெரிய பங்களா வாங்கி புதியதாய் வந்துள்ள ஆடம்பர கார் வாங்கி அவனுக்கு அல்லது அவளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களும் குழந்தை பெற்று அவர்களையும் நம்மைப்போல ஆளாக்கி விளையாடி படிக்க வைத்து சம்பாதித்து? இப்படியே போய் இறுதியில் என்ன? ............................. இதை படிப்பதற்க்கே சலிப்படையும்  நம் மனம் இப்பிறப்பின் நோக்கத்தை அறியாமல் வாழும் வாழ்க்கையை அனுபவிக்கத்தெறியாமல், தான் தன் குடும்பம் என்ற சுய நலம் கொண்டு எதிர்கால நோக்கம் ஏதுமின்றி வெந்ததை தின்று வந்தது நோய் என்று சாகின்ற பெரும்பாலான மக்களிடையே நம்மை உணராமல் நாம் எங்கே போகிறோம்?
      
 நாம் பிறந்தது பிள்ளைகளை பெறுவதும், சந்ததியை வளர்த்து சொத்துக்களைச்சேர்த்து சுய நலத்துடன் வாழவதற்க்காகவா? மனிதனை போன்றே மிருகங்களும், பறவைகளும், மற்ற ஜீவராசிகளும் வாரிசுகளுடன் பல்கிப்பெருகி வருகின்றன. அனால் அறறிவு  படைத்த நாம் பிறப்பின் நோக்கத்தை சிந்தித்து பார்க்கவேண்டும், நாம் செல்லும் வாழ்க்கை பாதை சரியானதுதானா? என பரிசோதிக்கவேண்டும். நம் ஒவ்வொருவருடைய செயலும் ஆசையின் விளைவே என்பதனை அறிந்து, மனம் என்னும் குரங்கை மடக்கி நியாயமான ஆசையை மட்டுமே பயன்படுத்தி பேராசை தவிர்த்து பிறவிப்பெருங்கடலை கடக்கும் வழி தெறிந்து வாழ வேண்டும்.
      
ஆசை! ஆம் இந்த ஆசையினால் நமது வாழ்க்கையை தொலைக்க, பாதைகளில் செல்லும் போது எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ, அவ்வளவு வேகத்தில் சிக்னலில் கூட நிற்க பொறுமையின்றி ஒரு நிமிடத்தை (அதாவது 60 வினாடிகளை) 60 மணி நேரம் போல காத்திருக்க விரும்பாமல் விரைவாக சென்று விபத்திற்க்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண், காது, கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்களுடனும், விரைவாக போகவேண்டும் என, மிக விரைவாக வாழ்வை முடித்துக்கொண்டவர்களுடனும் நாம் எங்கே போகிறோம்?
      
பக்கத்து வீட்டுக்காரர் வாழும் வாழ்க்கையை பார்த்து அவரை விட ஒரு படி மேலே வாழ ஆசைப்பட்டு தவறான வழியில் விரைவாக அதிக பணம் சம்பாதித்து தனதுவாழ்க்கையை தொலைத்து சிறையில் கழித்துக்கொண்டிருப்பவர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?
     
தான் உழைக்காமல் மற்றவர்களின் உழைப்பை பயன் படுத்தி பணம் சேர்க்கும் புதிய முறை வெளிநாடு வாழ் வல்லுனர்களின் கண்டுபிடிப்பாக  நெட்வொர்க் மார்க்கட்டிங் அல்லது மல்டி லெவல் மார்க்கட்டிங் என்ற பல பெயர்களில் ஆசை வார்த்தைகளால் மக்களின் மனதை கவர்ந்து விரைவாகவும் வேகமாகவும் பணம் சேர்க்கும் புதிய முறையை விரும்பி காலத்தை விரையம் செய்து கடன்காரர்களாகி கவலைகளில் மன அழுத்த நோய்க்கு ஆளாகி மருத்துவமனைகளில் குடும்பத்துடன் வளம்வருபவர்களில் நாம் எங்கே போகிறோம்?
     
பெற்ற குழந்தைகளை உடனடியாக மேதையாக்கி எதிர்வரும் காலத்தில் அவன் அல்லது அவள் கை நிறைய சம்பாதித்து பார்க்கும் ஆசையில் சாதாரண கல்விமுறை போதாது என்று மாநிலத்திலேயே உயர்ந்த பள்ளியில் சேர்த்து இண்டர்நேசனல் அல்லது சென்ட்ரல் போர்டு புத்தகமூட்டைகளை சுமந்து சென்று படிக்கும் கல்வியினால் பயனாவது என்ன? என்ற அறியாமையிலேயே படிக்கவைக்கும் பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் உள்ளனர். இவர்களில் நாம் எங்கே போகிறோம்?

     கல்வியை கடைச்சரக்காக்கி வியாபாரம் செய்து வயிறு வளர்க்கும் வளமான பள்ளியிலும், கல்லூரியிலும் தன் குழந்தைகளை படிக்கவைக்க பாடுபடும் பாமரர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?
     
வரும்முன் காப்போம் என்ற எச்சரிக்கை உணர்வு இன்றி கண்டதை கண்டபடி தின்று உடம்பை கெடுத்து நோய்களுக்கு ஆளாகி சம்பாதித்த பணத்தை செலவு செய்ய மிகப்பெரிய மருத்துவமனைகளில் விடுதியில் அறை எடுத்து தங்குவதுபோல முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள், அறை கிடைத்ததும் அடையும் மகிழ்ச்சியின் எல்லையை பார்க்கும் பொழுது (உண்மையான மகிழ்ச்சி தெரியாததால்) மரணத்தின்  நுழைவாயிலில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

     நோயின்றி வாழும் வழிமுறை ஆயிரம் இருக்க, அதையறியாமல் நோய்வந்தால் எந்த மருத்துவமனையில் எவ்வளவு செலவு செய்யலாம்?, எந்த மருத்துவ காப்பீடு சிறந்தது?  நான் இறந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? அதற்கு எவ்வளவு பிரீமியம் கட்டுவது? என மிகவும் முன் எச்சரிக்கை உணர்வு கொண்டு பெருநோய்களுக்கு ஆளாகி ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்த மொத்த பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் முழுவதுமாக தொலைத்துவிட்டு தன் குடும்பத்தையும் நடுத்தெருவிற்க்கு கொண்டு வந்த்தவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?
     
கல்வி கற்க அனுப்பினால் காதலிக்க கற்றுக்கொண்டு கண்டவர்களுடன் சுற்றி கண்ணியத்தை இழந்து கருத்து ஒற்றுமை இன்றி காவலர்கள் முன்னிலையில் கைப்பிடித்து கடைசியில் கட்டைப்பஞ்சாயத்து கைக்கொடுக்காமல் நீதிமன்றம் தலையிட்டு கட்டிய தாலியை கழற்றுவதற்க்கு போராடும் கணவன் மனைவியர்களுடன்  நாம் எங்கே போகிறோம்?
     
சொத்துக்காக ஆசைப்பட்டு சொந்த அண்ணன் தம்பிகளைக்கூட அனுபவிக்கவிடாமல் சுயநலமாய் வாழ்ந்து கோர்ட்டிற்க்கு சென்று குடும்ப மானத்தை குழைத்து இறுதியில் தானும் அனுபவிக்காமல், மற்றவர்களையும் அனுபவிக்க விடாமல் மடிந்தவர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?
     
சாதியென்ற பேரைச்சொல்லி ஓட்டு வாங்கும் அரசியல், சாதி சான்றிதல் இன்றி தேர்வு எழுதமுடியாத கல்வி, சாதியில்லை சாதியில்லை என்றும், எல்லோரும் ஓர் குலம் என்றும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து சாதித்தவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

இன்றைய இளைய சமுதாயம், நம் நாட்டின் எதிர்காலத்தின் தூண்கள், அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேரான பாரத்த்தின் பெறுமை தெறியாது பண்னாட்டு தயாரிப்பான காலத்தை அழிக்கும் காலனான டி.வி., சினிமா, செல்போன், வீடியோ கேம்ஸ் போன்ற உபகரணங்களில் மதிமயங்கி வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கின்றவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

சர்கார் வேலை சவுகரியமான வேலை என்று படித்தவர்கள் அனைவருமே அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றனர், வேலை கிடைத்தவர்களும், செய்யாத வேலைக்கு அரசு சம்பளம் போதாமல், கையூட்டு, போராட்டம், போன்ற வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

தங்களது வாரிசுகள்தான் (தன்னுடைய மகன், மகள் அல்லது பேரன், பேத்தி) எதிர்காலத்தில் வாழப்போவது என்பதையறியாது உயிர் வாழ்விற்க்கு ஆதாரமான விவசாயம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் கலப்படம், போலி ஆகியவற்றாலும், இயற்கை அன்னையின் குழந்தைகளான நீர், நிலம் காற்று போன்றவைகளை மாசுபடுத்தி இனிவரும் காலம் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியாமல் செய்துகொண்டிருக்கின்ற புண்ணியமானவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

படிக்கின்ற செய்தித்தாள்களில் பக்கத்துக்கு பக்கம் நாட்டின் தற்போதைய அவல நிலையை பார்த்தும், தனக்கும், அதற்க்கும் சம்பந்தமேயில்லாதது போல தினம் தினம் சூடான செய்திகளை சுவைத்து மகிழும் சிற்றுண்டி போல ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கண்ணியவான்களுடன் நாம் எங்கே போகிறோம்?

பணத்தைக்காட்டி பதவியை கேட்டு வாங்கும் அரசியல்வாதிகளை பணத்திற்க்கு ஆசைப்பட்டு ஓட்டுப்போட்டுத் தேர்ந்த்தெடுத்து விலைவாசி உயர்வு, மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு போன்ற இன்னல்களையும் ஊக்கத்தொகையாக வாங்கிக் கொண்டு, மேலும் மேலும் பணத்தை மட்டுமே குறியாக சம்பாதிக்க நினைத்து மக்களின் அடிப்படை ஆதாரங்களைப் பற்றி சிறிதும் கவலை படாத, எதிர்காலத் தேவை, திட்டம் ஏதுமற்ற அரசியல்வாதிகளின் மத்தியில் நாம் எங்கே போகிறோம்?

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது. ஆனால் வருகினற தலைமுறை வருங்காலத்தில் நல்ல அரசை உருவாக்கி வளமான இந்தியாவை உருவாகும் என்ற நம்பிக்கை வீணாகும்படி அவர்களின் கையில் பான்பராக்கும், மதுபாட்டிலும், சிகரெட்டும் தான் உள்ளது. எதிர்கால நல் இந்தியாவை உருவாக்கும் இளைஞர்களின் மத்தியில் நாம் எங்கே போகிறோம்?

அன்னியர்களிடம் அடிமைப்பட்டிருந்த பாரதத்தை மீட்டு அடகுக்கடைக்காரனிடம் கொடுத்ததுபோல தரங்கெட்ட, தகுதியற்ற  அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சிறிதும் கவலையின்றி அரசாங்கத்தின் அனுமதியுடன் கள்ளும், புகையும் குடித்து எதிர்காலத்தை தொலைத்து, அவர்கள் தரும் இலவசத்திற்க்கும் ஆசைப்பட்டு தன் தேவை ஒவ்வொன்றிற்க்கும், அவர்களிடம் கையேந்தி நிற்க்கும் அவல நிலையில் தன் குடும்பத்தை தவிக்க விட்டு, தன் நாட்டை சீரழித்தவனுடன் நாம் எங்கே போகிறோம்?

ஒரு பக்கம் பிளாஸ்டிக் பொருட்களின் வாயிலாக சூடாக வாங்கப்படும் உணவுபண்டங்கள் அதாவது டீ, காபி, சாம்பார், இரசம், போன்றவைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி வாங்கி வந்து உண்ணும் பழக்கம், மற்றும் குடிக்க பயன்படுத்தும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியும் கப்புகள் போன்றவை சூட்டில் ஒருவித இரசாயன மாற்றத்திற்க்கு உட்பட்டு கேன்சர் போன்ற பெரு நோய்களுக்கு ஆளாகி தன் முடிவை தானே தேடும் அறியாமை மனிதர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

மற்றொரு பக்கம் அணு ஆராய்ச்சி என்று ஆயுதங்களாலும், புதிய தொழில் நுட்பத்தாலும் மக்களை சிற்து சிறிதாக அழிவுப்பாதையில் கொண்டு சென்று, இந்த பூமியை பாழ்படுத்தியது போதாது என்று இனி சந்திரனுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ மக்களை கொண்டு சென்று குடியமர்த்த போராடும் நவீன விஞ்ஞானிகளுடன் நாம் எங்கே போகிறோம்?

இறைபக்தி இன்னதென்று அறியாத இடைத்தரகர்களின் வாயிலாக இறைவனை அறிய முயற்ச்சிப்பவர்களும், மன அழுத்தம் போக மகத்தான தியானம் என பல பெயர்களில் பணம் பறிப்பவர்களின் பின்னால் பயிற்சி எடுப்பவர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மானிடரை ............ ?          

ஏன் இந்த அவல நிலை? அனைத்திற்க்கும் காரணம் ஆசை. ஆம் இத்தனைக்கும் நோக்கம் பணம் சம்பாதிக்கும் ஆசை. இன்றைய மனிதர்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் போதே முடிவு செய்துவிடுகின்றனர், இவன் நிச்சயமாக டாக்டர், இவன் நிச்சயமாக வக்கீல், இவன் எஞ்சினீயர், ............... அல்லது அரசு வேலை? ஆனால் ஒருவரும் என் மகன் அல்லது மகள்  நாட்டை காக்கும் ஞானியாகட்டும், உணவு கொடுக்கின்ற விவசாயி ஆகட்டும், ஆடை கொடுக்கின்ற நெசவாளியாகட்டும்  என்று விரும்புவதில்லை, பணம் ஒன்றே பிரதானம் என்பதால் அனைவரும் பணத்தை மட்டுமே குறியாக வைத்து ஓடுகின்றனர், அதன் வெளிப்பாடுதான் இன்றைய நிலை! பணத்தை மட்டும் வைத்து மரணத்திலிருந்து விடுபடமுடியுமா? பணத்தினால் பாசத்தை வாங்கிவிடமுடியுமா? தேவைக்கு மேல் பணம் சேர்த்து கடைசியில் கொண்டு செல்ல முடியுமா? சுனாமிகள் போதுமா? பூகம்பங்கள் தேவையா? சிந்தியுங்கள்! விரைவாக இதில் சிந்தியுங்கள்.

பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை
மெய்யென்றான் மெய்யாய் விடுமோ பராபரமே.

மனிதன் மரணமில்லாத பெரு வாழ்வு வாழும் வழி நம் முன்னோர்கள் ஔவையார், திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் போன்ற பல்வேறு சித்தர் பெருமக்கள் நம்மிடையே வாழ்ந்து தெள்ளத்தெளிவாக நம்மை வாழவைக்க முயன்றிருக்கின்றனர்,  நாம் நம் அறியாமையாலும், வெளி நாட்டு மோகத்தாலும், நமது இயல்பை இழந்து மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இத்தனைக்கும் அடிப்படை ஒழுக்கத்தை போதிக்காத, பணம் மட்டுமே சம்பாதித்துக்கொண்டு, உயர் பதவிகளின் மூலம் பணம் மட்டுமே சம்ம்பதிப்பது எப்படி? என்று கற்றுக்கொடுக்கும் குரு பக்தியற்ற  கல்விமுறையும் ஒரு காரணம் ஆகும்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இந்த நிலை மாற நாம் ஒவ்வொரு நபரும் முதலில் தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று முன் வரவேண்டும், அப்பொழுதுதான் நாம் நம் குடும்பத்தை நல்வழியில் மாற்றி, அவர்கள் வாயிலாக சுற்றுப்புறத்தை மாற்றி, சுற்றமும் நட்பும் மாறியபின் இந்த ஊர் மக்கள் தெளிவடைந்து, மாநிலங்கள் மாற்றமடைந்து, இந்த தேசம் மிகப்பெரிய நல்ல ஆரோக்கியமான, ஊழலற்ற, சாதிகளற்ற சமூக மாற்றத்தை சந்திக்கும்.

எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேரொன்றுமறியேன் பராபரமே.



1 comment:

Saravanan said...

Great job.A must read. I have written an article on "Enge pogirom?". Read and leave your comment. My blog is:
know-the-mind-of-god.blogspot.com