பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Wednesday, July 25, 2012

நான் யார் ?



உலகம் முழுவதும் வாழும் மக்களின் மனதில் எழக்கூடிய கேள்வி எது என்றால் நான் யார்? என்ற கேள்வியாகும். ஏன் இந்த கேள்வி மக்கள் மனதில் எழுகிறது என்றால், அவர்கள் தற்பொழுது வாழக்கூடிய வாழ்க்கையின் இன்பதுன்பங்களாலும், மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்தும் இந்த கேள்வி எழுகிறது. இப்படி வாழ்க்கையின் இன்பதுன்பங்களை ஒப்பிட்டு பார்த்து நான் யார் என்ற கேள்வி எழுப்புவோர் ஒரு சாரார்.

சிலர் பக்தி, தியானம், யோகம், ஞானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கும் நான் என்பது ஆன்மா என்றும், இந்த உடல் நானில்லை என்றும் சமய நூல்களின் மூலமாகவும், பல சாமியார்கள் மூலமாகவும், கேட்டு அறிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் நான் யார் ? என்ற கேள்வி உதிக்கிறது.

இப்பொழுது நான் யார் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்!

மனித உடலில் மூன்று அணு இருக்கின்றது, இவற்றை சூரியன், சந்திரன், மூலம் என்று மூன்று அக்னியாக குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்று அக்னியின் சாரம் தான் மனித உடலை இயக்குகிறது. இந்த மூன்று அக்னிகளும், முக்குணங்களாகாவும், எட்டு அவஸ்தைகளாகவும், விருப்பு-வெறுப்பு, இன்ப- -துன்பம் போன்ற செயல்களுக்குள் ஆட்பட்டு இருக்கிறது. ஆகவே இவை மனித உடலில் தனித்தனியாக இயங்குகிறது. இதனால் தான் மனிதனின் மனம்

இந்த அவஸ்தைகளுக்கு ஆட்பட்டு, எல்லா செயல்களிலும் “நான்” என்ற அகங்காரத்திற்க்கும், மாயைக்கும், வினைகளுக்கும் ஆட்பட்டு, இறைத்தன்மையை அறியமுடியாமல் போகிறது. மேலும் தனக்கும், இறைவனுக்கும் சம்பந்தமில்லாமல், தானே தன் அறிவைக்கொண்டு செயல்படுவதாக நினைத்துக்கொண்டு நான், நான், நான் என்ற கர்வத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

ஆனால், இந்த மனிதன் இறைத்தன்மை எது? நான் யார்? என்பதை பகுத்தறிய முடியாமல் தவிக்கிறான். அப்படிப்பார்த்தால் மனிதன் நேர்மையும் – நியாயமும் இல்லாதத்தன்மையில் உணர்வுரீதியாக வாழ்ந்து, அவஸ்தைகளில் இருப்பது தான் “நான்” என்ற உணர்வை ஏற்படுத்துவதாகும். இப்பொழுது நான் என்ற உணர்வையும், இறைத் தன்மையையும் பிரித்து பார்ப்போம். இதற்கு ஒரே வழி ஞானயோகம் செய்வது தான்.

நான் என்ற உணர்வு நூறு சதவிகிதம் துன்பத்தை தருவதால் ஞானிகள் இதற்கு விடை கண்டார்கள். யோகம் செய்யும் போது சுவாசத்தை கட்டுப்படுத்தி, உயிர் ஆற்றலை பெருக்கி, மனதில் உள்ள அவஸ்தைகளை நீக்கி, முக்குணங்களையும் கடந்து, அதன் மூலம் மனத்தை ஒளிநிலையை அடையச்செய்து, அதன் மூலம் ஆன்ம ஒளியை பிரகாசிக்கச் செய்து, இன்ப-துன்பும், விருப்பு வெறுப்புகளை கடந்து ஒளியான மனதை ஆன்மா ஒளியில் லயிக்கச் செயயும் போது எற்படும் நிலைகளை இப்போது பார்ப்போம்.

மனம் அவஸ்தைக்ளை கடந்தபின், நமக்குள்ளே மூல அக்னி தன்மையும், சூரிய அக்னி, சந்திர அக்னி தன்மைகளும் பெருகி மூன்று அக்னியும் ஒன்று சேரும் நிலை ஏற்படும். அப்பொழுது ஆன்மா ஒளி பேராற்றலை பெற்று பல்கி பெருகும். அப்பொழுது மனம் அந்த ஆன்மா ஒளியில் சேர்ந்து நிற்கும். இது தான் சமாதி நிலை ஆகும். சமாதி நிலையை தொடர்ந்து ஒருவர் செய்துவரும்பொழுது பேராற்றலை கிரகித்துக் கொள்வார். அவர் சமாதி நிலையிலிருந்து விடுபட்டு, உலக மக்களுடன் பழகும் போது அவர்களால் ஏற்படும் இன்ப-துன்பங்களிலிருந்து அவர்களுடைய மனம் உணர்ச்சிவசப்படாமல், எந்த வித ஆணவமும், அகங்காரமும், கர்வமும் இல்லாத நிலையில் இருக்கும். அப்போது தான் அவர்கள் தனது மனத்திலும், செயலிலும், சிந்தனைகளிலும் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வார்கள்.

அப்பொழுது அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்கள், செய்யக்கூடிய செயல்கள் இறைவனுடைய உணர்வே என்பதை உணர்கிறார்கள். இந்த நிலையில் தான் "நான்' என்ற எண்ணம் அழிக்கப்படுகிறது. இது எப்படி என்றால், பேராற்றல்தான் அந்த இறைத்தன்மை மிக்க ஒளி அன்பு, கருணை, எளிமை, பொறுமை, அமைதி, அடக்கம், சாந்தம், தூய்மை போன்ற எண்குணத்தால் நிரம்பியிருப்பதால், சமாதி நிலையில் அதனை கிரகிக்கும். அவனுக்குள்ளும் அந்த உணர்வுகளின் பதிவுகளை கொடுக்கிறது. ஆகவே அதைபெற்று, அந்த நிலையில் அவன் வாழும்போது, இதெல்லாம் அங்கிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதை உணர்ந்து அந்த நிலையிலே வாழ்வதால் “நான்” என்ற உணர்வு அழிகிறது. அப்போது அவர்களுடைய சொல்லும், செயலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. அப்போது தான் நான், நான் என்று சொன்னவர்கள் “எல்லாம் அவன் செயல்” என்று கூறுகின்றனர்.

ஆகவே, மூன்று அக்னியும் நமது உடலில் தனித் தனியாக இயங்கி கொண்டிருக்கும் வரை “நான்" என்ற நிலை மனிதனுக்குள் ஏற்படும். மூன்று அக்னியும் ஒன்றாகிவிட்டால், சமாதி நிலை ஏற்பட்டு, பேராற்றலை பெறும்பொழுது தான் நான் என்ற நிலை ஒழியும். அப்போது தான் நாம் இறைத்தன்மையை அடைகிறோம், இறைசெயலால் வாழ்கிறோம், அதனால் எல்லா உயிர்களையும் தன் உயிர்போல நினைக்கிறோம். அதனால் அங்கு நான் என்பது அழிந்துவிடுகிறது என்பதை அறிகிறோம்.

ஆகவே உலக மக்களே! எட்டு அவஸ்தைகளின் மொத்த உருவம் தான் நான அதனை நீக்கினால் இறைத்தன்மையை அடையலாம். இதுதான் உண்மையான நான் ஆகும்

No comments: