பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Sunday, November 3, 2013

தேடல்



"தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவோரெல்லாம் சிவனை அறிவார், சிவமே ஆவார்".

சிவமே என்று தொழுவோர்க்கு அகமே சிவம் எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான். ஒருவரின் குறை தங்களால் தான் தீர வேண்டும் என்ற விதி இருந்தால் விளம்பரங்களும் அழைப்புகளும் இல்லாமலேயே அவர் தங்களை நாடி வருவார்....'அயமாத்மா பிரம்ம' - இந்த ஆத்மாவே பிரம்மம்!  'தத்வமயி' - எதுவாக நினைக்கிறாயோ
நான் அதுவாகவே இருக்கிறேன்!' அஹம் பிரம்மாஸ்மி' - நான் பிரம்மமாக இருக்கிறேன்!

'அதிதி தேவோ பவ' - அனைத்தும் நானாகவே இருக்கிறேன்! நானே பிரம்மமாக இருக்கும்பொழுது கடவுள் என்பவர் எதற்கு? வாசகங்களை அவரவர் புரிந்து கொள்ளுதலில்தான் அதன் பொருள் இருக்கிறது.

சித்தர்களை என்று வணங்க ஆரம்பிகின்றோமோ அன்றே ஞானத்திற்கான வாயில் திறக்கப்படுகிறது, ஞானப் பயணமே நம் லட்சியப் பயணம். அதை நோக்கி பயணிப்பது மனிதனாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப் பெரிய சேவை! சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை? ஏனெனில் சித்தத்தை உணரும்போது மௌனமாகி விடுவர்கள் . ஈசன் என்ற நினைப்பில் தம்மை முழுமையும் அர்பணித்து விடுவார்கள். பஞ்ச பூதங்களை உணரும்போது தான் தம்மையே உணரும் பாக்கியம் கிடைக்கும் , அவ்வாறு கிடைத்த சந்தோசத்தை யாருடன் பகிர்ந்து கொள்வான்?

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட் பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

எது தான் சரி?

மனம், புத்தி, சித்தம், ஆகாயம் இவை அனைத்தும் ஆத்மாவின் ஒவ்வொரு படிக்கல்லே. மனம் என்பது மாயையினால் கட்டுண்ட உயிரின் மயக்க நிலையேயாகும். அடுத்த படி புத்தி, இது போதம் அல்லது அறிவு பெற்ற நிலையாகும்.

நீங்கள் தேடுவது தான் என்ன? வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை சந்தித்து வந்தவர்கள், கடவுளை காண முடியாதா? என ஏங்கிக்கொண்டிருக்கும் பல இதயங்கள், அவனையே குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும். உங்களின் உண்மையான தேடல் என்ன என்பதை கண்டறிந்த பின் அந்த கோரிக்கையை அவர் முன் வையுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

அவன் அருளால் அவன் தாள் வணங்க, அனைத்தும் அம்சமாக கிடைக்கும். அதற்காக உங்களின் நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என் கருத்து. இறைவன் யாருக்கு எப்போது அருள்வான் என்பது யாருக்குமே தெரியாது. அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பது போல அவன் செயலும் அவனை அன்றி யாரும் அறியார். 


கடவுளுக்கு தெரியாதா நமது தேடல் என்னவென்று தேவை என்னவென்று. அவனை நாடி அவன் அருளை தேடி அவன் பாதம் தொழுவோர்க்கு அன்பே உருவாக அவன் காட்சி கிடைக்கும்...........!!!

Tuesday, June 25, 2013

ஸ்ரீ திருச்சிற்றம்பல சுவாமிகள்

ஸ்ரீ போகர் உலகிற்கு தந்த சற்குருமார்களில் சுவாமி சிவானந்த பரமஹம்சரும் ஒருவர். சித்தவேதம்  என்னும் அறிய படைப்பின் மூலம் தன் குருநாதர் உபதேசித்த சாகாக்கலையாம் வாசி யோகத்தின் ஆதி சூட்சமங்களை மாந்தர் கடைதேருவதர்காக உபதேசித்து வந்தார்.
இத்தகைய சிவஞான குருவின் சிவயோக சீடராய் பரிமளித்தவரே              ஸ்ரீ திருசிற்றம்பல சுவாமிகள். சிவயோகத்தின் பல்வேறு நிலைகளை கடந்து சகஜநிலை சமாதியில் பல வருடங்களாய் எளிமையுடனும் அடக்கத்துடனும் தம்மை சற்றேனும் வெளிக்காட்டாமல் உலக நன்மைக்காக சமீப காலம் வரை வாழ்ந்த உத்தம மகா யோகி. இத்தகைய யோகியை  ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் வெள்ளை ஆடை சித்தன்  என்னும் திருநாமம் கொண்டு மகிழ்வுடன் அழைத்திடுவார் .
தான் வாழ்ந்த 108 வருடங்களில் பிரம்மச்சரிய தவத்தை ஏற்று பிரம்மஞானியாக வாழ்ந்த பரோபகார காருண்யா சித்தர்.

 சுவாமிகளின் சமாதி கோவில் மற்றும் அங்குள்ள சிவலிங்கமும் அவராலேயே நிர்மாணிக்கப்பட்டது. அன்னதானம் , வஸ்திரதானம் , ஆலயதிருபணிகளும், ஏழை எளியவர்களுக்கு உண்டான மருத்துவ சேவைகளும் மிக எளிமையாக செய்துகொண்டிருந்தார்.
      
இத்தகைய மகயோகியான சுவாமிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு கார்த்த்கை மாதம் மூல நட்சத்திரத்தில் மகாசமாதி அடைந்தார்.


இந்தியாவிலேயே பெரிதும், மிகவும் அரிதான சக்தி வாய்ந்த                  சிதம்பர சக்கரமும் , திரு அம்பலக்கூரையும் ஒருங்கே அமையப்பெற்ற சித்தரின் ஜீவ சமாதியே திருசிற்றம்பல சுவாமிகளின் ஜீவாலயம்.

ஸ்ரீ சிற்றம்பல சுவாமிகள் ஜீவாலயம்

பாலக்காடு மெயின் ரோடு ,

அப்புபிள்ளையூர்,கொழிஞ்சாம்பாறை ,

பாலக்காடு ,கேரளா .