பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Saturday, July 28, 2012

இறைவனை அறிய முடியாது


               கிடைத்தர்க்கறிய இந்த மானிட பிறவி நமக்கு வாய்த்துள்ளது.அதனை வீணாக்காமல் பிறவி பயன் அடைய வேண்டும். அதற்க்கு முதலில் நாம் யார்? நம்மை படைத்தவர் யார்? என்பதனை அறிய வேண்டும்.
               
               ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கம், தாய் தந்தையரை வணங்குதல், குருவை பூசித்தல், குருவின் வாயிலாக நாம் யார்? என்பதை அறிந்து எங்கும் நிறைந்த இறைவனை அறிதல்.

               “உடம்பினைப் பெற்றப் பயனாவ தெல்லாம்
     உடம்பினும் உத்தமனைக் காண்”.

என்ற ஔவை பிராட்டியாரின் திருவாக்கு இந்த உடல் எடுத்த பயன் உத்தமனைக் (இறைவனை) காண்பது ஆகும்.

மேலும் திருமந்திரத்தில் திருமூலரும்
            
                “உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்     
`    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
                  உடம்பினுள் உத்தமன் கோயில் கொண் டானென்று
                  உடம்பினை யானிருத் தோம்புகின் றேனே”.


 என்று கூறியுள்ளார்.ஆகவே இந்த மானிட உடலை நோயற்ற ஆரோக்கியமான உடலாக மாற்ற யோகாஸனம், பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகள் வாயிலாக ஆரோக்கியமான தேகத்தைப் பெற்று
          
          “நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
            வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
            ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
            தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே”.

என்று தெய்வத் திருமூலர் அவர்கள் கூறியுள்ளது போல நம்மிடையே வாழுகின்ற நம் உடன்பிறவா சகோதர சகோதரிகளை நாம் செல்லும் இந்நல் வழியில் நம்முடன் கைசேர்த்து அழைத்து செல்ல முயலவேண்டும்.
            
           
           “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
             நற்றாள் தொழாஅர் எனின்”.

என்று வள்ளுவர் சொன்னது போல எவ்வளவுதான் கற்றிருந்தாலும்  நாம் பெற்ற இந்தகல்வியின் பயன் நம்மைப் படைத்த இறைவனின் திருவடிகளை தொழாமல், அவனை அறியாமல்
            
           
           “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
             இறைவன் அடிசேரா தார்.

என்ற குறளுக்கேட்ப பிறவியாகிய பெரிய கடலை நாம் கடக்க முடியாது.

              ஞானிகளும், மகான்களும் சொல்லிச் சென்ற விசய ஞானங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு நம்மிடையே வாழுகின்ற மற்றவர்களுக்கும் அந்த நற்க்கருத்துக்களையும், நற்பயிற்சிகளையும் தெரிவித்து அவர்களும் நம்மைப் போல இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்த உதவி செய்ய வேண்டும்.
            

            ”கற்க கசடற கற்பவை கற்றபின்
              நிற்க அதற்கு தக.

என்ற குறள் வழியில் கற்கத் தகுந்த நல்ல விசயங்களை குற்றமறக் கற்று, கற்றபிறகுக் கற்றக் கல்விக்குத் தக்கவாறு அவ்வழியில் நிற்க வேண்டும்.
             
               மானிட வாழ்க்கையில் மிக முக்கியமான கல்வி என்று எடுத்துக் கொண்டால் தூய அறிவு வடிவாக விளங்கும். எங்கும் எதிலும் நிறைந்துள்ள இறைவனைப் பற்றி அறிகின்ற கல்விதான் உண்மையான கல்வியாகும். மற்றவையனைத்தும் பொருளாதாரத்துக்காகவும் ஆடம்பரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் தொழில் செய்து ஜீவனம் நடத்தவும் மட்டுமே பயன்படும் கல்வியாகும்.
            
                இன்றைய மனித இனம் ஆசையில் உழன்று செல்வத்தைச் சேர்த்து நோயில் வீழ்ந்து மடிவதைக் கண்ணாறக் காண்கின்றோம். இன்னிலை மாற ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து, இறைவனை அறிதல் வேண்டும்.
           
                 என்றும், எப்பொழுதும் எங்கும் வியாபித்துள்ள உண்மைப் பொருளாகிய இறைவனை, பரமாத்மாவை அறியும் முயற்சியில் பல வகையான வழிமுறைகள் இருப்பினும், மனிதன் முதலில் தன் நிலை உணராமல் தன்னை அறியாமல் நான்தான் எல்லாம் செய்கிறேன் என்ற அகந்தை அழியாமல் இறைவனை அறிய முடியாது.
            

No comments: