”சிவலோக
பதவி”, “வைகுந்த
பதவி”, “முக்தி
அடைதல்” இவையெல்லாம்
இறந்து போனவர்களை அடையாளப் படுத்தும் வார்த்தைகள் என்றே பலரும் நினைத்துக்
கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல....
முக்தி அடைதல் என்பதன் தூய தமிழ் வடிவம் ”விட்டு
விடுதலையாதல்” அல்லது ”வீடு பேறடைதல்” என்பதேயாகும்.
யோகத்தில் உயர் நிலையான சமாதி நிலைக்கு அடுத்த நிலைதான் இந்த முக்தி
நிலை. இதனை மீண்டும் ”பிறவா பேரின்ப நிலை” என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறப்பிற்குப் பின்னர் முக்தி அடைதல் என்பது வெறும் வாய் வார்த்தை
எனச் சொல்லும் சித்தர்கள், வாழும்
காலத்தில், இந்த
உடல் இருக்கும் போதே அத்தகைய பிறவா பேரின்ப நிலையினை அடைந்திட வேண்டும் என்கின்றனர்.
இந்த முக்தி நிலையை அடைய ஒரே வழி யோக மார்க்கம் என்று
சொல்லும் சித்தர்கள்,
இந்த யோக உறுப்புக்கள் எட்டு நிலைகளைக் கொண்டதாக கூறியிருக்கின்றனர். அவை முறையே 1.கடிவு (இயமம்), 2.நோன்பு (நியமம்), 3.இருக்கை (ஆசனம்),4.வளிநிலை (பிராணயாமம்), 5.ஒருக்கம்
(பிரத்தியாகாரம்), 6.நிறை
(தாரணை), 7.ஊழ்கம்
(தியானம்) , 8.ஒன்றுகை
(சமாதி) என்பதாகும்.
கொங்கணவர் தனது வாத காவியத்தில் முக்தி பற்றி இவ்வாறு
சொல்கிறார்.
காணப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே
கைமுறையாய் நடக்கிறதே விபரமென்பார்
பூணப்பா யெந்தெந்தக் காரியங்கள் வந்தும்
புகழாகத் தயக்கம் வந்தும் பிரமமென்றும்
தோணப்பா நிரந்தரமும் வேதாந்தம் பார்த்துச்
சொன்னமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
ஆணப்பா நியமமென்ற பத்துஞ் சொன்னே
னறிந்திந்த விருபதையும் மறுட்டித்தேறே
- கொங்கணவர் -
குரு அருளிய யோக வழிமுறையின் படி நடப்பது தான் விரதம்
என்பார்கள். இதன் வழி நிற்போர் எக்காரியம் வந்தாலும், எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும், அனுதினமும் தானே பிரம்மம்
என்பதை உணர்ந்து தியானித்து வருவதே விரதம் ஆகும். இதுவே நியமம் என்ற
பத்து வகை ஆகும். மற்றயது இயமம் என்று அழைக்கப்படும் பத்துவகை ஆகும். இயம,நியமமாகிய இந்த
இருபதையும் முறையாக கடைப் பிடித்தாலேயே யோகத்தில் முன்னேற முடியும் என்று
சொல்லும் இவர் தொடர்ந்து...
எறியிந்த விருபதையும் மநுட்டியாட்டால்
என்னசொல்வேன் சீவனில்லாச் சித்திரம் போலாம்
தேறியிந்த வடிப்படையை வைக்குமுன்னே
சிற்றெடுத்த சுழிகைக்கு மொக்குமொக்கும்
ஆறியிந்தக் காயசித்தி பண்ணுமுன்னே
யாயிரமாங் கலியுகத்தைக் கண்டதொக்கும்
மாறியிந்தச் சடத்தோடே முத்தி காணான்
மாண்டபின்பு முத்தியென்ற வாறுபோமே
- கொங்கணவர் -
இவ்விருபதையும் முறையாக கடை பிடிக்காதவன் ஜீவனில்லா சித்திரம் போலானவன்.
அத்தகைய செயல் முறையாக தொடங்கப்படும் எந்தக் காரியமும் பாதியளவு நிறைவடைந்ததுக்கு சமானமாகும்
என்கிறார். அத்துடன் காய சித்தி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே
ஆயிரம் கலியுகத்தை கண்டதற்க்கு சமனாகும் என்றும், இவ்வுடலுடன் இருக்கும் போதே
முக்தி அடையாதவர்கள்,
இறந்த பின் முக்தி அடைவது என்பது வாயளவில் வார்த்தையாக ஆகிவிடும்
என்கிறார்.
No comments:
Post a Comment