பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Thursday, January 2, 2014

நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ?


வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ இலட்சியங்களும் குறிக்கோளும் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம், நாம் அனைவரும் ஒரே எல்லையை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதுதான். 

அதுதான் மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், அமைதி இப்படி பல பெயர்கள் கொண்ட அந்த ஒரே விசயம்...........எத்தனைதான் சாதனைகள் புரிந்தாலும், மகிழ்ச்சி என்ற ஒன்று கிட்டாத வரை அதில் எந்த பலனும் இல்லை அல்லவா? இந்த மகிழ்ச்சி எதனால் அதிகம் வருகிறது? அல்லது எப்போது நிலைத்து நிற்கிறது, இது எல்லோருக்குமே எழக்கூடிய ஒரு வினாதானே.........

பெரும் பணக்காரராக, அதாவது கோடிக்கணக்கான சொத்து உள்ளவராக இருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சி வருமோ?

ஓரளவிற்கு, அதாவது ஒரு டிகிரி என்று வைத்துக் கொள்ளலாம். சரி தேவையான துணிமணிகளும், பொருட்களும் வாங்கிமுடித்தவுடன் பிறகு சிறிது சிறிதாக மகிழ்ச்சி குறைந்து சலிப்பு தோன்ற ஆரம்பிக்கும்.சமீப காலங்களில் சராசரி வருமான விகிதம் கணிசமாக ஏறித்தான் இருக்கிறது. ஆனால் அதனால் மகிழ்ச்சி பெருகியுள்ளது என்று கூற முடியாது. பணம் ஒரு அளவிற்கும் மேல் சேர்ந்து விட்டால், பிறகு அது மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய காலம் எப்போதென்றால், தன் நண்பனை விடவோ, தன் பக்கத்து வீட்டுக்காரரைவிடவோ அல்லது நெருங்கிய உறவினரைவிடவோ அதிகமாக இருக்கும் வேளையில் மட்டுமே சிறிது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும்.

பணம் மனிதரின் தரத்தை உயர்த்துகிறது. தரம் உயர்ந்தால், மற்றவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அப்போது ஓரளவிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.ஆனாலும் மத்திய வர்க்கத்திலுள்ளவர்களை விட மேல்மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்த மகிழ்ச்சியுடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

விருப்பு அதிகமானால் மகிழ்ச்சி அதிகமாகுமா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸ் மெகேலோஸ் என்ற விஞ்ஞானி பல நாடுகளிலிருந்தும் 18,000 கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து அவர்களிடம், மகிழ்ச்சி குறித்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வின் முடிவில், அவர்களின் விருப்பம் பணம் தேடல் பற்றியதாக இல்லாமல், நட்பு, குடும்பம், வேலை, ஆரோக்கியம், தொழில் போன்றவைகளின் முன்னேற்றம் குறித்ததாகவே இருந்தது. அதாவது போதும் என்ற மனம் இருப்பதில்லை. தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதனால், மகிழ்ச்சி இருப்பதில்லை.

அதி புத்திசாலித்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

மிகுந்த அறிவாளிகளாக இருப்பவர்கள் அதிக எதிர்ப்பார்ப்பு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே சாதாரண சாதனைகளவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது அவர்களின் சாதனைகள் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதைவிட, மேலும் பெரிய சாதனைகள் செய்ய வேண்டுமென்ற வெறி, மகிழ்ச்சியைத் தடை செய்துவிடுகிறது.

பிறவியிலேயே வரும் ஒரு குணமா.....இந்த மகிழ்ச்சி என்பது?

இது ஓரளவிற்கு உண்மையாம். அதாவது, மரபணு வழியாக இந்த மகிழ்ச்சி, தன்னிறைவு வரும் வாய்ப்பு இருக்கிறதாம். அதாவது, தாய் தந்தை வழியாகவும், அவர்கள் வளர்ப்பு முறையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியப் படுகிறது. சலிப்போ, சங்கடமோ மகிழ்ச்சியோ எதுவாகினும், பரம்பரைப் பழக்கமும் துணை போகிறது. பெற்றோர் எவ்வழியோ, குழந்தைகள் அவ்வழி........

அழகுமகிழ்ச்சிக்கான ஒரு முக்கியமான காரண்மா?

அழகாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதற்கு, ஆச்சரியாமான பதில் ஆம் என்பது. பொதுவாக ஆரோக்கியமான அழகு உடையவர்கள் மகிழ்ச்சி உடையவர்களாகவே உள்ளனர் என்கிறது சில ஆய்வறிக்கைகள்.இதில் இன்னொரு ஆச்சரியம், மனதில் தான் அழகாக இருப்பதாக எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் கூட போதுமாம், மகிழ்ச்சியுடையவர்களாக இருப்பதற்கு. பொதுவாக பெண்கள் பெரும்பாலும் தாங்கள் குண்டாக இருப்பதாகவும், ஆண்கள் சிறிய வடிவில், [உயரம் மற்றும் சதைப்பிடிப்பு ] இருப்பதாகவும் எண்ணி வருந்துகிறார்களாம்.

நல்ல நட்பு மகிழ்ச்சியைக் கொடுக்குமா ?

சமூக உறவுகள் மனித வாழ்க்கையின் அடிப்படை மகிழ்ச்சிக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருப்பதுதான் நிதர்சனம். நல்ல நட்பு வட்டம் உடையவர்களும், கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவுகளுடன் சார்ந்து வாழும் தன்மையுடையவர்களும் பெரும்பாலும் மகிழ்ச்சியுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

திருமணம் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஆதாரமா?

42 நாடுகளில் செய்த ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க ஆய்வாளர்கள், நல்ல திருமண வாழ்க்கை அமைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் அடிப்படையான மகிழ்ச்சி உடையவர்களாகவே இருக்கிறார்களாம். தனிமனிதனாக இருப்பவர்களைவிட, திருமணம் ஆகி நல்ல குடும்பத்துடன் வாழ்பவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.

நம்பிக்கை - மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

ஹெரால்ட் கோயிங் என்கிற அமெரிக்க மனோதத்துவ நிபுணர், மறுபிறவி நம்பிக்கை உடையவர்கள் வாழ்க்கையில் அதிகமாக தனிமையை உணர்வதில்லை என்கிறார். ஒருவகையில் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் இதனோடு ஒத்துப் போகிறது. மன அழுத்தமான சூழலில் இந்த ஆன்மீக நம்பிக்கை ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவதாக பல தத்துவ ஞானிகளும் சொல்கின்றனர். நம் அனுபவத்திலும் நம்மால் அதை உணர முடிகிறது. மத நம்பிக்கை பல எதிர் விளைவுகளுக்கு ஒரு நிவாரணியாகவே செயல்படுகிறது. ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கை கொண்டோரின் ஆயுள் விருத்தியாவதற்கும் இதுவே காரணமாகிறது. மன அமைதியும், நம்பிக்கையும் ஒருவரை மகிழ்ச்சியான சூழலில் வைத்திருக்க உதவி புரிகிறது.

தயாள குணம் மகிழ்ச்சியை அதிகப்படுத்துமா?

ஆம் என்கிறது நம் சைவ சித்தாந்தமும், கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மத தத்துவங்களும். தயாள குணம் உடனடி மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு ஆயுதம் என்கிறது மனோத்தத்துவ ஆய்வுகள். இது கொடுப்பவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் ஆக இரு சாராருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விசயமாகும். இதற்கு சரியான சான்று மகாபாரதப் போரில் கர்ணன் தன் இறுதி நேரத்தில் கூட தன் தர்ம புண்ணியங்கள் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்து மகிழ்ச்சி அடையும் உன்னத நிலையாகும்.

வயது முதிர்ச்சியால் மகிழ்ச்சி கூடுமா குறையுமா?

முதுமை அவ்வளவு கொடுமை அல்ல. ஆம் முதுமையில் தான் தன்னிறைவு அடைகிறதாம் மனது. காரணம் முதியவர்கள் வாழ்க்கையின் கடினமாகப் பகுதியையே அதிகமாக எதிர்பார்த்து இருப்பதனால், பிரச்சனைகள் அவர்களின் மகிழ்ச்சியைப் பாதிப்பதில்லை என்கிறது ஆய்வுகள். அனுபவம் காரணமாக தங்களின் இயல்பை உணர்ந்து வைத்திருப்பதாலும், தங்களுக்கு சாத்தியமாகக் கூடிய விசயங்களிலேயே நாட்டம் செலுத்துவதாலும் அவர்களின் மகிழ்ச்சிக்கு பங்கம் வருவதில்லை. அதாவது சுருங்கச் சொன்னால், 85 வயது பெரியவர் தன் மனைவிக்குக் கொடுக்கும் பிரியாவிடை முத்தம் ஏற்படுத்துகிற உணர்வுப்பூர்வமான பின்விளைவுகள் ஒரு 20 வயது இளைஞன் தன் மனைவிக்குக் கொடுக்கும் முத்தம் ஏற்படுத்துவதில்லை என்கிறது ஆய்வுகள்!!

ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில் தான் உள்ளது என்பது தெளிவாகிறதல்லவா?



No comments: