பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Thursday, January 2, 2014

பத்தாம் வாசலைத் திறப்போம் வாருங்கள்




முத்திரைகளின் அரசன் என்று கேசரி முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். 

நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும் உயிர்சக்தியே குண்டலினி ஆகும். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. 

குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு. குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ரஹாரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர். 

பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ரஹாரத்தை அடையும். 

நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ரஹாரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். 

கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும். இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபாலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர்களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார். 

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. 

சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும்.

மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள். 

மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம். 

யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும். 

அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச்சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள்.

இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது. 

அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.  

முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம்,  
ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும் ஞானத்தின் பத்தாம் வாசல்.

No comments: